நல்லூர் திருவிழா: நல்லூர் பெருந்திருவிழாக்களும் அதன் சிறப்புகளும்
இலங்கைத் தமிழர் அதிகம் வாழும் பிரதேசமான யாழ்ப்பாணத்தின் கலாசார அடையாளமாக விளங்கும் நல்லூர் கந்தசாமி ஆலய பெருந்திருவிழா ஆவணி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும்.

நல்லூர் பெருந்திருவிழா காலங்களில் யாழ்ப்பாணம் மட்டுமல்ல, இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் திரள்வது வழமையானதாகும். நல்லூர் ஆலயமானது நேரம் தவறாமைக்கும், தூய்மைக்கும் முன்னுரிமையளிப்பதோடு முன்னுதாரணமாகவும் விளங்குகிறது.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கோயிலை சூழவுள்ள மண்டபங்களில் இடம்பெறும் கலாசார நிகழ்வுகள் திருவிழா சூழலை இன்னும் இனிமையாக மாற்றும்.
கொடியேற்றத் திருவிழாவை தொடர்ந்து தினசரி காலை, மாலை உற்சவங்களுடன் வெளிவீதியுலாவும் இடம்பெறும்.
நல்லூர் சிறப்பு மகோற்சவ நாட்கள்
நல்லூர் திருவிழாவில் மஞ்சம், கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனம், கஜவல்லி மகாவல்லி உற்சவம், வேல்விமானம், சப்பறம், இரதோற்சவம், தீர்த்தோற்சவம், பூங்காவனம் என்பன முக்கியமானவையாகும்.
நேர்த்திக்கடன்
திருவிழாக்களின் போது பக்தர்கள் பறவைக் காவடி, இழுவைக்காவடி எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், பெண்கள் கற்பூரச் சட்டி ஏந்தியும், அடியளித்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் முருகனை வழிபடுவர்.
நேரந்தவறாமையை கடைப்பிடிக்கும் முதன்மையான ஆலயமாக திகழும் நல்லூரில் இன்றும் அர்ச்சனை டிக்கெட் ஒன்று ஒரு ரூபாயாகவே காணப்படுவது தனிச்சிறப்பானதாகும்.
கோவிலில் ஆண், பெண் பக்தர்கள் கலாசார ஆடைகளை அணிய வேண்டும்
ஆலயத்தினுள் செல்லும் ஆண் பக்தர்கள் மேலங்கி (சேர்ட் / ரீசேர்ட்) அணியாமல் வேட்டியுடன் செல்ல வேண்டும் என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தோள்கள் மற்றும் கால்களை மறைக்கும் சேலை, பட்டுப்பாவாடை தாவணி அல்லது சுடிதார்/ சல்வார் அணிய வேண்டும்.
யாழ்ப்பாண மாநகரசபைக்கு அதிக வருமானம் பெற்றுக் கொடுக்கும் ஒரே திருவிழாவாக இது காணப்படுகிறது, நல்லூர் திருவிழாக் காலங்களில் அதிக வணிக வாய்ப்புகளும் கோயிலைச் சுற்றி உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக திருவிழாக் காலங்களில் நல்லூரானை சூழவுள்ள அன்னதான மண்டபங்கள் பக்தர்களின் பசியைப் போக்குவதுடன், தாக சாந்தி நிலையங்கள் அடியார்களின் தாகத்தை போக்கி வருகின்றன.
நல்லூர் திருவிழா எப்போது ஆரம்பமாகிறது?
ஆடி அமாவாசை என்பது சைவ சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்த நாளாகும். இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்ற நீத்தார்களான நம் முன்னோர்களை நினைந்து தீர்த்தமாடி கடமைகளை முடித்து உடலையும் மனதையும் சுத்தமாக்கி உறவுகளுடன் சேர்ந்து வாழையிலையில் சைவ உணவை எடுத்துக் கொள்கிறோம்.
ஆடி அமாவாசையை அடுத்து வரும் ஆறாம் நாள் நல்லூர் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
கொடிச்சீலை கொண்டு வருதல்:
கொடியேற்றத்திற்குத் தேவையான கொடிச்சீலை, யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடத்திலிருந்து செங்குந்தர் மரபினரால் பாரம்பரியமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் ஒப்படைக்கப்படும்.
நல்லூர் கொடியேற்றம் – 1 ஆம் நாள் திருவிழா
நல்லூர் திருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறும், இதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் இறைவன் வீதி உலா வருவார். ஆடி அமாவாசையை அடுத்து வரும் ஆறாம் நாள் நல்லூர் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.
நல்லூர் மஞ்சத் திருவிழா – 10 ஆவது நாள்
நல்லூர் மகோற்சவத்தின் 10 ஆம் நாள் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலைநயத்துடன் அமைக்கப்பட்ட மஞ்சத்தில் முருகப்பெருமான் (கந்தசுவாமி) அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நல்லூர் கைலாச வாகனம் – 20 ஆவது நாள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 20-ஆம் நாள் திருவிழாவாக கைலாச வாகன உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான் கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கைலாய மலையைத் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் முருகன் வீதியுலா இடம்பெறும். இது ஆலயத்தின் மிக முக்கிய வாகன உற்சவங்களில் ஒன்றாகும்.
மாம்பழத் திருவிழா – 22 ஆவது நாள்
நல்லூரின் 22-ஆம் திருவிழாவாக ‘மாம்பழத் திருவிழா’ (தண்டாயுதபாணி உற்சவம்) கோலாகலமாக நடைபெறுகிறது. முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக, தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாம்பழங்களைச் சமர்ப்பித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
