நல்லூர் திருவிழா: நல்லூர் பெருந்திருவிழாக்களும் அதன் சிறப்புகளும்
இலங்கைத் தமிழர் அதிகம் வாழும் பிரதேசமான யாழ்ப்பாணத்தின் கலாசார அடையாளமாக விளங்கும் நல்லூர் கந்தசாமி ஆலய பெருந்திருவிழா ஆவணி மாதத்தில் அமாவாசையை அடுத்து வரும் ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகும்.

நல்லூர் பெருந்திருவிழா காலங்களில் யாழ்ப்பாணம் மட்டுமல்ல, இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும், உலகெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் திரள்வது வழமையானதாகும். நல்லூர் ஆலயமானது நேரம் தவறாமைக்கும், தூய்மைக்கும் முன்னுரிமையளிப்பதோடு முன்னுதாரணமாகவும் விளங்குகிறது.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவுகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கோயிலை சூழவுள்ள மண்டபங்களில் இடம்பெறும் கலாசார நிகழ்வுகள் திருவிழா சூழலை இன்னும் இனிமையாக மாற்றும்.
கொடியேற்றத் திருவிழாவை தொடர்ந்து தினசரி காலை, மாலை உற்சவங்களுடன் வெளிவீதியுலாவும் இடம்பெறும்.
நல்லூர் சிறப்பு மகோற்சவ நாட்கள்
நல்லூர் திருவிழாவில் மஞ்சம், கார்த்திகைத் திருவிழா, கைலாசவாகனம், கஜவல்லி மகாவல்லி உற்சவம், வேல்விமானம், சப்பறம், இரதோற்சவம், தீர்த்தோற்சவம், பூங்காவனம் என்பன முக்கியமானவையாகும்.
நேர்த்திக்கடன்
திருவிழாக்களின் போது பக்தர்கள் பறவைக் காவடி, இழுவைக்காவடி எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், பெண்கள் கற்பூரச் சட்டி ஏந்தியும், அடியளித்தும், நேர்த்திக்கடன் செலுத்தியும் முருகனை வழிபடுவர்.
நேரந்தவறாமையை கடைப்பிடிக்கும் முதன்மையான ஆலயமாக திகழும் நல்லூரில் இன்றும் அர்ச்சனை டிக்கெட் ஒன்று ஒரு ரூபாயாகவே காணப்படுவது தனிச்சிறப்பானதாகும்.
கோவிலில் ஆண், பெண் பக்தர்கள் கலாசார ஆடைகளை அணிய வேண்டும்
ஆலயத்தினுள் செல்லும் ஆண் பக்தர்கள் மேலங்கி (சேர்ட் / ரீசேர்ட்) அணியாமல் வேட்டியுடன் செல்ல வேண்டும் என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் தோள்கள் மற்றும் கால்களை மறைக்கும் சேலை, பட்டுப்பாவாடை தாவணி அல்லது சுடிதார்/ சல்வார் அணிய வேண்டும்.
யாழ்ப்பாண மாநகரசபைக்கு அதிக வருமானம் பெற்றுக் கொடுக்கும் ஒரே திருவிழாவாக இது காணப்படுகிறது, நல்லூர் திருவிழாக் காலங்களில் அதிக வணிக வாய்ப்புகளும் கோயிலைச் சுற்றி உருவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக திருவிழாக் காலங்களில் நல்லூரானை சூழவுள்ள அன்னதான மண்டபங்கள் பக்தர்களின் பசியைப் போக்குவதுடன், தாக சாந்தி நிலையங்கள் அடியார்களின் தாகத்தை போக்கி வருகின்றன.
நல்லூர் திருவிழா எப்போது ஆரம்பமாகிறது?
ஆடி அமாவாசை என்பது சைவ சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்த நாளாகும். இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்ற நீத்தார்களான நம் முன்னோர்களை நினைந்து தீர்த்தமாடி கடமைகளை முடித்து உடலையும் மனதையும் சுத்தமாக்கி உறவுகளுடன் சேர்ந்து வாழையிலையில் சைவ உணவை எடுத்துக் கொள்கிறோம்.
ஆடி அமாவாசையை அடுத்து வரும் ஆறாம் நாள் நல்லூர் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
கொடிச்சீலை கொண்டு வருதல்:
கொடியேற்றத்திற்குத் தேவையான கொடிச்சீலை, யாழ்ப்பாணம் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடத்திலிருந்து செங்குந்தர் மரபினரால் பாரம்பரியமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தில் ஒப்படைக்கப்படும்.
நல்லூர் கொடியேற்றம் – 1 ஆம் நாள் திருவிழா
நல்லூர் திருவிழா 25 நாட்கள் தொடர்ந்து நடைபெறும், இதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் இறைவன் வீதி உலா வருவார். ஆடி அமாவாசையை அடுத்து வரும் ஆறாம் நாள் நல்லூர் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.
நல்லூர் 2 ம் (இரண்டாம்) நாள் திருவிழா
கொடியேற்றத்தைத் தொடர்ந்து இரண்டாம் திருவிழாவில் காலைநேரப் பூஜைகள் காலை 10 மணியளவில் இடம்பெறும். மாலை நேரம் முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி உள்வீதி மற்றும் வெளிவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நல்லூர் 3 ம் (மூன்றாம்) நாள் திருவிழா
மூன்றாம் நாள் மாலை நேரம் முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், வள்ளி தெய்வானை அன்னப்பட்சி வாகனத்திலும் எழுந்தருளி உள்வீதி மற்றும் வெளிவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்கள்.
நல்லூர் 4 ம் (நான்காம்) நாள் திருவிழா
ல்லூர் நான்காம் நாள் மாலை நேரம் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் வெளிவீதியுலா வலம் வருவார். வெளிவீதியுலாவின் போது திருவிழா நாட்களில் அன்னதான மடங்கள், அறப்பணியாற்றும் நிலையங்கள் எல்லாம் பூரண கும்பம் வைத்து நைவேத்தியம் படைத்து முருகப்பெருமானை வழிபடுவர்.
நல்லூர் 5 ம் (ஐந்தாம்) நாள் திருவிழா
ஐந்தாம் நாள் திருவிழாவின் போது முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராகச் சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் வீற்றிருப்பார். மாலை முருகப்பெருமானும், வள்ளி தெய்வானையும் அன்னப்பட்சி வாகனத்தில் உள்வீதி, வெளிவீதியுலா வந்து அருட்காட்சியளிப்பர்.
நல்லூர் 6 ம் (ஆறாம்) நாள் திருவிழா
ஆறாம் நாள் திருவிழாவின் போது முருகப்பெருமான் வள்ளி , தெய்வானை ஆகியோர் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்கள். திருவிழாவின் போது மாலை நேரம் நல்லூரை சூழவுள்ள வீதிகளில் அமைந்துள்ள மடங்கள் மற்றும் கோயில்கள், அரங்குகளில் பல்வேறு இன்னிசை கச்சேரிகளும் இடம்பெறும்.
நல்லூர் 7 ம் (ஏழாம்) நாள் திருவிழா
ஏழாம் நாள் திருவிழா மாலை நேரத்தின் போது முருகப்பெருமான் காராம்பசு வாகனத்திலும், வள்ளி தெய்வானை இடப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். வெளிவீதியுலாவின் போது பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடி, பஜனை செய்தபடி பின் தொடர்ந்து வருகின்றமை சிறப்பானதாகும்.
நல்லூர் 8 ம் (எட்டாம்) நாள் திருவிழா
எட்டாம் நாள் திருவிழாவின் போது முருகப்பெருமானும், வள்ளி தெய்வானையும் மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பர். திருவிழாக்களின் போது அதிகாலையில் 3 மணி தொடக்கம் நல்லூர் வெளிவீதியில் ஆண் பக்தர்கள் அங்கப்பிரதட்ஷனம் செய்து மனமுருகி வழிபடுவர்.
நல்லூர் 9 ம் (ஒன்பதாம்) நாள் திருவிழா
ஒன்பதாம் நாள் மாலை திருவிழாவின் போது முருகப்பெருமானும், வள்ளி தெய்வானையும் யானை வாகனத்தில் வெளிவீதியுலா வந்து அருள்பாலிப்பார். கொடியேற்றத்துக்கு பின்னர் ஒன்பதாம் நாள் திருவிழா வரை பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்படுவது வழமையானதாகும்.
நல்லூர் 10 ம் நாள் திருவிழா – மஞ்சம்
நல்லூர் மகோற்சவத்தின் 10 ஆம் நாள் திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலைநயத்துடன் அமைக்கப்பட்ட மஞ்சத்தில் முருகப்பெருமான் (கந்தசுவாமி) அமர்ந்து வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நல்லூர் 11 ம் (பதினோராம்) நாள் திருவிழா
பதினோராவது நாள் திருவிழாவின் போது முருகப்பெருமானும், வள்ளி தெய்வானையும் வண்ணமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பத்தாம் திருவிழாவான மஞ்சத்துக்குப் பின்னர் படிப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்குவது வழமையானதாகும்.
நல்லூர் 12 ம் (பன்னிரண்டாம்) நாள் திருவிழா
பன்னிரண்டாம் நாள் பகல் திருவிழாவின் போது முருகன், வள்ளி, தெய்வானை தனித்தனியே வண்ணமயில் வாகனங்களில் காட்சியளிப்பர். மாலை முருகப்பெருமான் வண்ணமயில் வாகனத்திலும், வள்ளி, தெய்வானை தனித்தனியே கிளி வாகனங்களிலும் பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
நல்லூர் 13 ம் (பதின்மூன்றாம்) நாள் திருவிழா
பதின்மூன்றாம் 13 ஆம் நாள் திருவிழாவின் போது முருகன், வள்ளி, தெய்வானை தனித்தனியே இடப (காளை) வாகனங்களில் காட்சியளிப்பர். திருவிழாக் காலங்களில் ஆலய வெளிவீதிகள் பொதுப் போக்குவரத்துக்காக மூடப்பட்டிருப்பதுடன், போக்குவரத்து பொலிஸார், சாரணர், செஞ்ஜோன்ஸ் அன்புலன்ஸ் கண்காணிப்பர்.
நல்லூர் 14 ம் (பதினான்காம்) நாள் திருவிழா
பதினான்காம் நாள் திருவிழாவின் போது முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி ஐந்துதலை நாக பாம்பின் வாகனங்களில் வெளிவீதியுலா வந்து காட்சியளிப்பர். நல்லூர் வீதிகள் மற்றும் ஆலய வளாகம் தோரணங்கள், கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கும்.
நல்லூர் 15 ம் (பதினைந்தாம்) நாள் திருவிழா
பதினைந்தாம் நாள் திருவிழாவின் போது முருகப்பெருமான் வள்ளி , தெய்வானை ஆகியோர் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார்கள். திருவிழாக்களின் போது குறிப்பாக மாலை நேரத்தில் முருகன் வீதியுலா வரும் போது பக்தி இசைகள், தோத்திரங்கள் செவிக்கு இனிமையாக இருக்கும்.
நல்லூர் 16 ம் (பதினாறாம்) நாள் திருவிழா
பதினாறாம் நாள் மாலை திருவிழாவின் போது முருகப் பெருமான் சிங்க வாகனத்திலும், வள்ளி, தெய்வானை தனித்தனியே மகர வாகனத்திலும் வெளிவீதியுலா வந்து அருள்பாலிப்பர். பொதுவாகவே நல்லூர் திருவிழாவின் போது ஏராளமான வெளிநாடு வாழ் பக்தர்கள் கலந்து கொள்வது தனிச் சிறப்பானதாகும்.
நல்லூர் 17 ம் (பதினேழாம்) நாள் திருவிழா
பதினேழாம் நாள் மாலை திருவிழாவின் போது முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனியே இடும்பன் வாகனத்திலும் வெளிவீதியுலா வந்து அருள்பாலிப்பர்.
நல்லூர் 18 ம் (பதினெட்டாம்) நாள் திருவிழா
பதினெட்டாம் நாள் மாலை அருணகிரிநாதர் உற்சவம் இடம்பெறும். மாலை முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்திலும், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனியே தங்க அன்னப்பட்சி வாகனத்திலும் வந்து அருள்பாலிப்பார்.
நல்லூர் 19 ம் (பத்தொன்பதாம்) நாள் திருவிழா – கார்த்திகை உற்சவம்
பத்தொன்பதாம் நாள் காலை 6.45 மணிக்கு சூர்யோற்சவமும், மாலை கார்த்திகை உற்சவமும் இடம்பெறும். முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் மயிலேறி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
நல்லூர் 20 ம் (இருபதாம்) நாள் திருவிழா – கைலாச வாகனம்
இருபதாம் நாள் காலை திருவிழா 6.45 க்கு ஆரம்பமாகி சந்தானகோபாலர் உற்சவம் இடம்பெறும். 20-ஆம் நாள் மாலை திருவிழாவாக கைலாச வாகன உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து, வள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான் கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். கைலாய மலையைத் தாங்கி நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் முருகன் வீதியுலா இடம்பெறும். இது ஆலயத்தின் மிக முக்கிய வாகன உற்சவங்களில் ஒன்றாகும்.
நல்லூர் 21 ம் (இருபத்தோராம்) நாள் திருவிழா – தங்கரதம்
இருபத்தோராம் நாள் காலை 6.45 க்கு திருவிழா கஜவல்லி மகாவல்லி உற்சவம் இடம்பெறும். மாலை வேல்விமானம் எனப்படும் தங்கரதத்தில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் வெளிவீதியுலா வருவார். தங்கரத காட்சியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பர்.
நல்லூர் 22 ம் (இருபத்தி இரண்டாம்) நாள் திருவிழா
(காலை – மாம்பழத்திருவிழா | மாலை – ஒருமுகத்திருவிழா)
இருபத்தி இரண்டாம் நாள் காலை 6.45 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவம் (மாம்பழத் திருவிழா) இடம்பெறும். காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா இடம்பெறும். முருக பெருமான் தண்டாயுதபாணியாக தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார்.
சிவபெருமானும் உமாதேவியாரும் தமது பிள்ளைகளான முருகன் மற்றும் பிள்ளையாரிடம் உலகை முதலில் சுற்றி வருபவர்களுக்கு மாம்பழம் தருவோம் என கூறியபோது, முருகன் மயில்மேல் ஏறி உலகைச் சுற்றி பறக்க, பிள்ளையார் தன் பெற்றோரை சுற்றிவந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்ட புராணக்கதையை மையமாகக் கொண்டே இந்த மாம்பழ திருவிழா இடம்பெற்று வருகின்றது.
மாலை இடம்பெறும் ஒருமுகத்திருவிழாவில் முருகப்பெருமான் பெரிய குதிரை வாகனத்திலும், இரண்டு பக்கங்களிலும் வள்ளி , தெய்வானை தலா மூன்று குதிரைகள் பூட்டிய இரு குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தார்கள்.
நல்லூர் 23 ம் (இருபத்தி மூன்றாம்) நாள் திருவிழா – சப்பறம்
இருபத்தி மூன்றாம் நாள் மாலை இடம்பெறும் சப்பறத் திருவிழா இலங்கையிலேயே ஒரு தனித்துவமான நிகழ்வாகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ வேற்பெருமான் வள்ளி தெய்வானை அருகே இருக்க வீதியுலா வருவார். வருடா வருடம் சப்பற சகடையின் மேல் பனை மரங்கள் கொண்டு கயிறுகளால் கட்டப்பட்டே 80 அடி உயரமான இந்த கட்டுச் சப்பறம் உருவாக்கப்படுகின்றது.
இலங்கையின் மிக உயரமான அசையும் கட்டுமானம் என ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் உள்ளதாகவும், அவை இப்போதும் பிரித்தானியாவின் அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னைய காலங்களில் நல்லூர் சப்பறம் நூற்று முப்பது அடியாக கட்டப்பட்டதாக குறிப்புக்கள் உண்டு. 1977 ஆம் ஆண்டு சப்பறம் முறிந்தது. அதன் பின்னர் சப்பறத்தின் உயரம் நூறு அடிகளாக குறைக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு மீண்டும் பெரிய சப்பறம் இழுக்கப்பட்டது. பின் வீதியின் அகலம் போதாததால் சப்பறப் படல்கள் குறைக்கப்பட்டு சப்பறத்தின் உயரம் 80 அடியாக குறைக்கப்பட்டது. பழைய சப்பறச் சகடை பழுதடைந்ததன் காரணமாக 2021 ஆம் ஆண்டு புதிய சப்பறச் சகடை செய்யப்பட்டது.
தாக சாந்தி தண்ணீர் பந்தல்கள் கோவிலை சுற்றிவர அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் தாகத்தை தீர்க்கின்றனர்.
நல்லூர் 24 ம் (இருபத்தி நான்காம்) நாள் திருவிழா
இரதோற்சவம் (தேர்த்திருவிழா)
இருபத்தி நான்காம் நாள் தேர்த்திருவிழாவுக்காக, அதிகாலையிலே பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூசை ஆகியன காலக்கிரமமாக முருகப் பெருமானுக்கு நடைபெற்றன. இலங்கையில் பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்கள் திரளும் ஒரு அற்புதமான பண்பாட்டு நிகழ்வாக தேர்த்திருவிழா நோக்கப்படுகின்றது. குறித்த நேரத்துக்கு தேர் இழுக்கப்பட்டு குறிக்கப்பட்ட நேரத்திலேயே தேர் இருப்பிடத்தை அடைவதும் உலகில் எங்கும் காணாத ஒன்றாகும்.
பால் காவடிகள், பறவைக் காவடிகள், கற்பூர சட்டிகள், அங்கப்பிரதட்சணம் மற்றும் சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். தேர்த்திருவிழாவின் அதிகாலையிலிருந்து இரவு வரை நூற்றுக்கணக்கான பறவைக்காவடிகள் ஆலயத்தை நோக்கி வருகின்றன. அதிகாலையிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கோவிலை சுற்றி அங்கப்பிரதட்ஷனம் செய்து வழிபடுவர்.
தேர்த்திருவிழாவன்று பருத்தித்துறை வீதி, பலாலி வீதி உள்ளிட்ட பல வீதியோரங்களிலும், சந்திகளிலும் தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வெயிலுக்கு இதமாக பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. மதியம் கோயிலை சூழவுள்ள அனைத்து மடங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றன.
தேர்த்திருவிழாவன்று ஆலய வெளிப்புறங்களில் யாழ். மாநகராட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் வியாபார நடவடிக்கைகளும் அமோகமாக இடம்பெறும். எங்களது உள்ளூர் உற்பத்திகள் மட்டுமல்ல தென்னிலங்கையிலிருந்து, இலங்கையின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு வர்த்தகர்களும், நிறுவனங்களும் படையெடுப்பது வழமையாகும்.
நல்லூர் 25 ம் (இருபத்தி ஐந்தாம்) நாள் திருவிழா – தீர்த்தம்
இருபத்தி ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழாவிழா காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகி முருகப்பெருமானின் வேல் ஷண்முக புஸ்கரணி தீர்த்த கேணியில் தீர்த்தமாடும் நிகழ்வு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் முன்னிலையில் இடம்பெறும். அடியார்கள் மீதும் தீர்த்தம் தெளிக்கப்படும்.
முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராக பிள்ளையார் மற்றும் சண்டேஷ்வரருடன் உள்வீதி, வெளிவீதி வலம் வருவார். வௌ்ளி எலி வாகனத்தில் பிள்ளையாரும், வௌ்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமானும்,வெள்ளி எருது வாகனத்தில் சடேஸ்வரரும் வெள்ளிமயில் மற்றும் வெள்ளி அன்னவாகனங்களில் வள்ளி,தெய்வயானை ஆகியோரும் வீதி வலம் வருவர்.
25 ம் நாள் மாலை 4.30 மணிக்கு கொடியிறக்கமும் இடம்பெறும்.
நல்லூர் 26 ம் (இருபத்தி ஆறாம்) நாள் திருவிழா – பூங்காவனம்
இருபத்தி ஆறாம் நாள் காலை வள்ளி தினைப்புனம் காத்தல் நிகழ்வு இடம்பெறும். வள்ளி தினைப்புனம் காத்தல் என்பது வள்ளிமலைக் குறத்தியான வள்ளி, தினைப் பயிர்களைப் பறவை மற்றும் விலங்குகளிடமிருந்து காக்கும் நிகழ்வாகும். இது குறிஞ்சித் திணையின் சிறப்பம்சமாகவும், முருகப்பெருமான் வள்ளியை வேட்டுவக் கோலத்தில் சந்தித்து யானை வடிவம் காட்டி, அச்சமடைந்த வள்ளியைத் திருமணம் முடிக்கும் வள்ளித் திருமணத்தின் முக்கியச் சடங்காகவும் கந்தபுராணத்தில் விவரிக்கப்படுகிறது.
மாலை 5.30 மணிக்கு பூங்காவனம் இடம்பெறும். வள்ளி-தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் ஆலய நந்தவனத்தில் திருக்கல்யாணம் கொண்டு அருட்காட்சியளிக்கும் வைபவமாகும். ஆலய நந்தவனத்தில் (பூங்காவனம்) சுவாமி எழுந்தருளி, ஊஞ்சல் உற்சவம் போன்ற பக்தி பாடல்களுடன் விழா கோலாகலமாக நடைபெறும். முருகனின் திருக்கல்யாணக் காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
நல்லூர் 27 ம் (இருபத்தி ஏழாம்) நாள் திருவிழா – வைரவர் உற்சவம்
இருபத்தி ஏழாம் நாள் வைரவர் உற்சவம் அல்லது வைரவர் மடை மாலை 4.45 மணிக்கு ஆரம்பமாகும். வைரவர் உற்சவத்தின் ஒரு பகுதியாக, ஆலயத்தின் காவலரான வைரவருக்கு விசேட பூஜைகள் மற்றும் சாந்தி நிகழ்வுகள் இடம்பெறும்.
வைரவர் பெருமான் நாய் வாகனத்தில் அல்லது அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளிப்பார். வெளிவீதியில் சேவற்கொடிகள் பொருத்தப்படும். வைரவர் உற்சவத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.
நல்லூர் மகோற்சவம் 25 ஆவது நாள் காலை தீர்த்த திருவிழா மாலை கொடியிறக்கம் இடம்பெற்றாலும், 26 ஆம் நாள் பூங்காவனமும், 27 ஆம் நாள் வைரவர் உற்சவமும் குறிப்பிடத்தக்கவையாகும்.
